பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -
23-01-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:பழைமை
குறள் எண்:805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
பொருள்:வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால், அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
பழமொழி :
Caution is the parent of safety
முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.
இரண்டொழுக்க பண்புகள் :
1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுவேன்.
2. அவசியம் தேவை என்றால் மட்டுமே அதிக விலை கொடுத்து வாங்குவேன் .
பொன்மொழி :
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான்.---சுவாமி விவேகானந்தர்.
பொது அறிவு :
1.செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது எது? -
விடை :டயலைசர்
2.சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு என்ன ?
விடை : 2 சதவீதம்
English words & meanings :
Acid-அமிலம்
Bucket-வாளி
வேளாண்மையும் வாழ்வும் :
உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
23-01-25 இன்று
தேசிய வலிமை தினம் ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் 2021 முதல்) இத்தினமாக கொண்டாடப்படுகிறது).
ஜாவா நிரலாக்க மொழியின் (1996) முதல் பதிப்பு வெளியானது.
கர்நாடக இசை வித்துவான் அரியக்குடி ராமானுஜம் ஐயங்கார் (1967) நினைவு தினம்.
நாட்டுக்கென தனி கொடியை அமைத்தவரும், இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தியவரும், அதில் பெண்களுக்கு, தனி பிரிவை உண்டாக்கியவருமான, புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1809), முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசு பெற்று தந்தவரான ஹிடேகி யுகாவா (1907), ரபீந்திர பிரஸ்கார் விருது பெற்ற, இந்திய எழுத்தாளரான ஜோதிர்மயி தேவி ஆகியோரின் பிறந்த தினம்.
நீதிக்கதை
நான்கு நண்பர்கள்
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர்.
முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர்.
ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன்.
“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.
“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன்.
“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான்.
எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர். அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர்.
ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர்.
“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்றரு மூவரும் அதை ஆமோதித்தனர்.
உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான்.
“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.
“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன்.
உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன்.
” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான்.
” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான்.
மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான்.
பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த நண்பர்களை தாக்கியது.
தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தியதை நினைத்தும், தங்கள் நண்பனை முட்டாள் என எண்ணியது குறித்தும் வருந்தினார்கள்.
நீதி : கல்வியறிவைப் பயன்படுத்தி சமயோசிதமாக யோசிக்க வேண்டும்.
இன்றைய செய்திகள் - 23.01.2025
* வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.
* டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.
* ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.
Today's Headlines
* A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.
* Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.
* Air services affected due to heavy fog in Delhi.
* If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.
* Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.
* ISL. Football Series: Chennai - Mohun Bagan match 'draw
No comments:
Post a Comment