பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: காலம் அறிதல்
குறள் எண்:483
அறுவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?
பொருள் :(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?
பழமொழி :
Blessings are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன்.
*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். –ஜான் ஹெர்சி
பொது அறிவு :
1. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?
விடை: கந்தக அமிலம்
2. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?
விடை: வேதாரண்யம்
English words & meanings :
muddy-சேறு,
sludge-கசடு
வேளாண்மையும் வாழ்வும் :
ஆடி மாதம், ஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும், ஆடி 18க்குப் பிறகு விவசாயிகள், விவசாயம் செழிக்க விதைக்க தொடங்குவார்கள்.
நீதிக்கதை
அழகு ஆபத்துக்கு உதவாது
ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. வயிறு முட்ட நீரை பருகியது.
அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.
சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.
மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை.
புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.
இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.
“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தன் கொம்புகளை
மரக்கிளையிலிருந்து விடுவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.
No comments:
Post a Comment