பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -
03-03-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
பொருள்:தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்."
பழமொழி :
Well began is half done
நல்ல தொடக்கம் பாதி வெற்றி
இரண்டொழுக்க பண்புகள் :
*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்
*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்
பொன்மொழி :
தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ
பொது அறிவு :
1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
விடை: 27
2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?
விடை: கால்சியம் பாஸ்பேட்
English words & meanings :
Proud - பெருமை
Sad - சோகம்
வேளாண்மையும் வாழ்வும் :
நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்
நீதிக்கதை
கடல்
கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும் கொடையாளி" என்று எழுதினார்.
இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.
கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.
முதிய பெண்மணி ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.
ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும் அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.
மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.
உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்
இன்றைய செய்திகள் - 03.03.2025
* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.
* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.
* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்
No comments:
Post a Comment